Friday, April 24, 2009

ரத்தம் ஏன் கொதிக்கிறது





உயர் இரத்த அழுத்தமுடையவர்களுக்கு ஆனந்தம்

அளிப்பதற்காகவே வந்திருக்கிறது மூச்சைச்

சீராக்குவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக்

குறைக்கும் கருவி ஒன்று.

உயர் இரத்த அழுத்தமுடையவர்கள் தங்கள் மூச்சை மெதுவாக

நன்றாக இழுத்து விடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை

கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்

என்றும் மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவை

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எனவும்

முன்பே ஆராய்ச்சிகள் தெரிவித்திருந்தன.
ஆனால் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்,

எல்லோரும் ஒரே அளவாகக் கட்டுப்படுத்த வேண்டுமா ?

என்பது போன்ற ஏகப்பட்ட நடைமுறைச் சந்தேகங்கள் இருந்தன.

சராசரியாக ஒரு மனிதன் நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவு பத்துக்குக் கீழே இருக்குமாறு சுமார் 15 நிமிடங்கள் பயிற்சி எடுத்தாலே உயர் இரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்.
இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவி மூச்சை வகைப்படுத்துகிறது. ஒரு இசைக்கருவி போல இருக்கும் இதை நெஞ்சில் கட்டிக் கொண்டால் நமது மூச்சின் வேகம், நமது உடலில் தசை நார்களின் இறுக்கம் போன்றவற்றை அளவிட்டு நாம் நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுவது நல்லது என்பதை கருவி முதலில் தீர்மானம் செய்து கொள்கிறது.

அதன் பின் இதில் இணைக்கப்பட்டுள்ள ஹெட்போனில் மெல்லிய தாளலயத்துடன் இசை எழுகிறது. ஒரு தாளத்துக்கு மூச்சை உள்ளே இழுத்து அடுத்த தாளத்தில் வெளியே விடவேண்டும்.
இந்த உள்ளே – வெளியே மூச்சு விடுதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். தேவையான அளவு இடைவெளி வந்தபின் சீராகும். இப்படி தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தாலே உயர் இரத்த அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த கருவியை பலருக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தியதில் முடிவு மிகவும் சாதகமானதாய் இருக்கிறதாம்.
உயர் இரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் உட்கொண்டு அதன் மூலம் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி, காலம் முழுவதும் மருந்தின் அடிமையாய் நகர்வதிலிருந்து இந்த கருவி விடுதலை அளித்திருக்கிறது.
நமக்குத் தெரிந்த மூச்சுப் பயிற்சியை ஒரு கருவியின் மூலம் நவீனப் படுத்தி காப்புரிமம் வாங்கி வெளியிட்டிருக்கின்றனர் புத்திசாலிகள் என்றும் கூட இதைச் சொல்லலாம்.